தென்னமரவடி அழியலாமா?

                                                             

அழகிற்கு அழகூட்டும்
அழகிய கிராமங்கள்
அழிவெதன்ன நியாயமா?
இயற்கை துறைமுகம்
இறைவன் கொடுத்த வரம்
திருமலை மாவட்டம்
தென்னவன்  ஆண்டான்
தென்னமரவடிக் கிராமம்…………
திசையின்றிப் போனது ஏன்?

அந்தக் கிராமத்தின் வாசனை
அழகிற்கு மெருகூட்டும்
அனைவருக்கும் சுகமூட்டும்
காலைத் தென்றல் வீசிவர
கன்னிப் பெண்கள் எழுந்துவர
சோலைக் குயில் பாடிவர
சோடி தனைத் தேடிவர
பசு கன்றை அணைக்கவர
பாசமுடன் அது ஓடிவர
கோழி தன் குஞ்சை சேர்த்திட
கொஞ்சி அவை விளையாட
அடைக்கலான் குருவிகள்
வீட்டுக் கூரையிலே
விளையாடி கூடுகட்ட
மலர்களின் நறுமணம்
சோலைகளின் அசைவு
சுகமான காற்று
கடல் அலையின் ஓசை
மெய் மறக்கும் சுகமல்லோ
பதவிக் குளத்தில் இருந்து
பாய்ந்து வரும் பறையநாற்றின்
பளிங்கான நீரும்
மக்களின் மகிழ்வான குளிப்பம்
ஆங்காங்கே காயும் அவர்களின் ஆடையும்
அதன் அருகே விளையாடும் மந்திக்கூட்டமும்
பக்கத்து விருட்சத்தின் பறவைகளின் கீதமும்
ஆ…எத்தனை அழகு எத்தனை அழகு

கோட்டானும் நாரையும்
கொக்கும் குருவியும்
கொடிய மிருகமும்
இன்று…குடியிருக்கலாமா?
அதிகார வர்க்கத்தின்
அடாவடித்தனத்தாலே
அழகுள்ள கிராமங்கள்
அழிந்து போகலாமா?
மகரந்தம் மணம் வீசும்
மண்வாசனை சுகம் பேசும்
கருக்களின் ஜனனங்கள்
தலைமுறை பல தாங்கி
சரித்திரம் படைத்ததுவே…..
இன்று…கருவற்று சாம்பலாகி
காடாகப் போகலாமா?
பூக்களாலே நிறைந்த இடம்
முட்செடிகள் நிறையலாமா?            
                                      ஆக்கம்
                               தென்னமரவடி யோகன்

Advertisements

புதிய வானம் புதிய பூமி

யுத்தங்கள் மண்ணில் ஓயவில்லை
யுகவர்க்கங்கள் இன்னும் தீரவில்லை
அடாவடிகள் இன்னும் அழியவில்லை
அடிமைச் சாசனங்கள் இன்னும் தேயவில்லை.

அடக்குமுறைகள் இன்னும் ஆறவில்லை
அராஐகங்கள் இன்னும் ஒழியவில்லை
மரண ஓலங்கள் இன்னும் மாறவில்லை
மனித நேயங்கள் இன்னும் காணவில்லை.

எல்லைக் கோடுகள் இனி நீங்குமா?
எதிரி படையெடுப்பின் நிலை மாறுமா?
இரத்தங்கள் நித்தம் சிந்துமா?
இளைய தலைமுறைகள் நாளும் மடியுமா?

கல்லறைகள் நித்தம் தொடருமா?
கண்களில் இரத்தம் வடியுமா?
காலங்கள் இனி மாறுமா?
கடை யுத்தங்கள் இனத்தீருமா?

மாறும் காலங்கள் வெகு தூரமில்லை
மக்கள் வாழ்க்கையோ இனி அலறலில்லை
மண்ணின் விடிவுக்கோ இனி உதயமுண்டு
மனித படைப்புக்கோ ஒரு நோக்கமுண்டு.

மரணங்கள் அங்கு ஏதுமில்லை
மனித நேயங்கள் கெம்பீகரிக்கும்
முந்தினவை என்றும் ஒழிந்து போகும்
முகங்களோ இனி மலர்ந்துபோகும்.

புதிய வானத்தை இனி பார்த்திடுவோம்
புதிய பூமியில் என்றும் வாழ்ந்திடுவோம்
புரியும் உண்மையில் நீ மகிழ்ந்திடு
புதிய தென்பினில் இனி உறங்கிடு.

படைப்பாளனோ இதை மாற்றுவான்
பகுத்துணர்வோன் இதை நோக்குவான்
புதிய வானத்தை இனி பார்த்திடுவோம்
புதிய பூமியில் என்றும் வாழ்ந்திடுவோம்.

பாலை வனங்கள் நீர் சுரக்கும்
பாழ் நிலங்கள் பயிர் செளிக்கும்
உலகம் அது புதிது
உரிமை அங்கு பெரிது

நீதி ஒளி கொடுக்கும்
நியாயம் நிலை எடுக்கும்.
சத்தியம் அதன் கொடி
நித்தியம் அதன் படி
புதிய வானம் அதைக் காண்போம்
புதிய பூமி அங்கு வாழ்வோம்.

ஆக்கம்
திருமலைத்தென்னவன்

உயிருள்ள வார்த்தை

வார்த்தையில் ஜீவனுண்டு
வல்லமையில் பலமுண்டு
வாசித்தால் அறிவுண்டு
நேசித்தால் வாழ்வுண்டு

இருபுறமும் கருக்குண்டு
எப்புறமும் நேர்மையுண்டு
ஊடுருவும் வலிமையுண்டு
உணர்வுதரும் எளிமையுண்டு.

ஊனை உருக்கிடும்
உணர்வை மதித்திடும்
கணுவை பிரித்திடும்
அணுவை உடைத்திடும்

ஆவியை தரமிடும்
ஆத்மாவை உரமிடும்
இதயத்தை வகையிடும்
நியமத்தை தொகையிடும்.

பதிவின் தேக்கம்
பரிசுத்த ஆக்கம்
படைப்பின் ஏக்கம்
பயனின் நோக்கம்

உயிரின் ஊற்று
உண்மையின் சாற்று
உடைமையில் முத்து
உலகின் சொத்து.

பெருமையின் வீழ்ச்சி
தாழ்மையின் உயர்ச்சி
கலகத்தின் தொடர்ச்சி
துன்பத்தின் இடர்ச்சி

பாவத்தின் அடி
மரணத்தின் பிடி
அன்பின் ஒளி
மீட்பின் வழி

கண்களின் தெளிவு
கடவுளின் வார்த்தை
உண்மையின் ஊற்று
உயிருள்ள வார்த்தை.

ஆக்கம்
திருமலைத்தென்னவன்

வறுமையில் அவள் காதல் வெறுமையானபோது.

புன்னகைத்தாள்
என் இதயத்துள்
புதைந்து கொண்டாள்
பூரித்தேன் என்னை
மறந்து நேசித்தேன்
ஏன்?………..?
அவள் கண்களும் எண்ணங்களும்
அவள் உதடுகளும் உணர்வுகளும்
அவள் சிந்தனையும் செயலும்
அவள் அழகும் சிரிப்பும்
அவளிடம் சிறையாக்கின.

அதிகம் அதிகம் நேசித்தாள்
ஆகாயத்தில் பறந்தேன்
பறவைகளின் வேகத்தைவிட
பல மடங்கு பறந்தேன்
ஏன்?……….?
அவளை நினைக்க நினைக்க இனித்தது
நினைவுகளில் அவளை சுமந்தேன்
காட்டுத் தீயின் வேகத்தை விட
காட்டாற்று வெள்ளத்தின் வேகத்தை விட
அவளின் பாச அலை என்னில் படர்ந்தது
நீ இல்லையேல் நெருப்பாகி
சாம்பல் ஆவேன் என்றாள்

உயிரோடு உயிரானாள்
உணர்வுகளில் சங்கமித்தாள்
இதமாக இதயத்துள் குடியிருந்தாள்.
ஆனால்…….எதுவரை?
சுனாமி என்னை சுக்குநூறாக்க
சுவாசிக்க காற்றும்
அருந்த நீரும்
உறங்கத் தரையும்
உடலும் உயிரும் மிஞ்சியது
என்னவளைத் தேடினேன்
ஏன்?……….
அவள் மட்டும் எனக்கு
ஆறுதலின் ஊற்றும்
அணைப்பின் தஞ்சமும் ஆனவள்
ஆனால்……….
வெறுமையாக கண்ட என்னை
வெட்டாந்தரையில் விட்டுவிட்டாள்
நான் என் கரங்களை நீட்டினேன்
வா என்று வரங்களைக் கேட்டேன்
கெஞ்சினேன் மீண்டும் மீண்டும் கெஞ்சினேன்

ஒட்டிய தூசியை தட்டுவது போல்
என்னைத் தட்டிவிட்டாள்
சுனாமியும் என்னை வறுமையாக்கியது
அவளும் என்னை வெறுமையாக்கினாள்

சுனாமியும் உயிர்களை அழித்தது
அவளும் காதலின் கருவை அழித்தாள்
சுனாமியின் பலியை விட
அவள் காதலின் வலி என்னை சாகடித்தது
ஏன்?……….
வறுமையில் அவள் காதல் வெறுமையானபோது.

ஆக்கம்
திருமலைத்தென்னவன்

என் சுவாசக் காற்றே!!!!

  
    

நிலவே உன் முகம் காட்டு
நிணலாக நான் தொடர்வேன்

கண்ணே உன் விழிகாட்டு
கண்ணிமைக்குள் சிறையாவேன்.

இதயத்தில் குடியிருக்க
இடம்தேடி நான் வருவேன்

இல்லையென்று நீ சொன்னால்
இனி யேது என் வாழ்வு.

இரு என்று நீ சொன்னால்
இருப்பதெல்லாம் உன் வாழ்வு

காற்றாக நான் வருவேன்
கண்ணே அதை மூச்சாக்கு.

நதியாக நீ வந்தால்
நான் அருகே கொடியாவேன்

பூவே நீ இதழானால்
புகுந்திடுவேன் வண்டாக.

என்னுக்குள் உன்னிதயம்
எப்போது சங்கமிக்கும்?

பொக்கிஷமாய் காத்திடுவேன்
பூவாக வைத்திருப்பேன்.

என்னவளே என்பாதி
எப்போது நீ ஆவாய்?

அதுவரைக்கும் காத்திருப்பேன்
ஆயுள்வரை பாத்திருப்பேன்.

என் சுவாசக்காற்றே…நீ
என்னிதயம் நிரப்பிவிடு

இல்லை என்று நீ சொன்னால்
என் மூச்சு நின்றுவிடும்.

ஆக்கம்.
திருமலைத்தென்னவன்

தொட்டில்

கருவறையில் தொட்டசொந்தம்
கடைசிவரை விட்டிடாமல்
கல்லறைக்குப் போகும்வரை
தொடரும் சொந்தம்
தொட்டில் சொந்தம்.

கருவாகி  நீ உருவாகி
காலங்கள் வரும்வரைக்கும்
சிசுவே நீ சிலகாலம்
உறங்குகிறாய் தாய்வயிற்றில்
உனைத்தாங்கும் தொட்டிலாக.

உலகத்தில் நீ வந்து
உறுதியுடன் பாதங்கள்
உனைத்தாங்கும் காலம்வரை
உறங்குகிறாய் தொட்டிலிலே
உன்வளர்ச்சி மேலோங்க.

உன்வாழ்வு நாளெல்லாம்
ஓடுகின்றாய் சக்கரமாய்
ஒருநாளில் பலமணிகள்
உறங்குகிறாய் சுமைபோக்க
உனைமறந்து தொட்டிலிலே.

உன்காலம் ஓடும்வரை
உறங்குவதில் முடிவில்லை
கருவினிலும் சிசுவினிலும்
குழந்தையிலும் இளைஞனிலும்
உறங்குகிறாய் தொட்டிலிலே.

முதிர்ந்தபினும் உறங்குகிறாய்
உதிர்ந்தபினும் உறங்குகிறாய்
ஊர்வலத்தில் நால்வருனை
சுமந்துசெல்லும் போதினிலும்
உறங்குகிறாய் தொட்டிலிலே.

கருவினிலே தொட்டசொந்தம்
உயிர்போயும் ஒட்டும்சொந்தம்
உறவுகள்தான் விட்டாலும்
தொடரும் சொந்தம்
தொட்டில் சொந்தம்.

                        ஆக்கியோன்
                        திருமலைத்தென்னவன்.

கட்டில்

 

உயிரை பூமியில் உருவாக்கி
உதிரம் மட்டும் சிகப்பாக்கி
உறவை அதிலே பலமாக்கி
ஆணும் பெண்ணும் இரண்டாக்கி
ஆண்டவர் இணைத்தார் துணையாக்கி.

ஆதியில் படைத்த சோடிகளை
ஆண்டவர் சேர்த்தார் கூடியதை
கணவன் மட்டும் சொந்தமிட
கட்டளை இட்டார் சாட்சியிட
கட்டில் சொந்தம் புனிதமிட.

மஞ்சம் அசுசிப் படாமலே
மனதில் வஞ்சம் தொடாமலே
அன்பின் பலத்தை விடாமலே
ஆக்கும் சொந்தம் மஞ்சமே
அதுதான் கட்டில் பந்தமே.

கட்டிலின் உறவை பலமாக்கி
கருத்தினில் ஒற்றுமை இனிதாக்கி
தொட்டிலின் வரவை உருவாக்கி
தொடர்ந்திட உயிர்கள் பலவாக்கி
தொடுத்தான் இறைவன் மணமாக்கி.

உயிர்கள் எத்தனை வகையுண்டு
உறவுகள் எத்தனை தரமுண்டு
உணர்வுகள் எத்தனை பலமுண்டு
கட்டிலின் மஞ்சம் கணவனுக்கே
கட்டளை ஆண்டவன் மனிதனுக்கே

ஆக்கம்
திருமலைத்தென்னவன்